சேலத்தில் ஓடும் மோட்டார்சைக்கிளுக்கு திருச்சி போலீசார் அபராதம் விதிப்பு

சேலத்தில் ஓடும் மோட்டார் சைக்கிளுக்கு திருச்சி போலீசார் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-11-26 19:30 GMT

சேலத்தில் ஓடும் மோட்டார் சைக்கிளுக்கு திருச்சி போலீசார் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லாரி டிரைவர்

சேலம் நெத்திமேடு குமரகவுண்டர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். லாரி டிரைவரான இவர், தனது மகன் ராஜசேகரன் பெயரில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது. அதை திருச்சி போக்குவரத்து பிரிவு போலீசார் அனுப்பி இருந்தனர்.

அந்த தகவலில் ஹெல்மெட் அணியாததால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். சேலத்தில் மோட்டார் சைக்கிளை வைத்திருக்கும் நபருக்கு திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ரூ.1,000 அபராதம் விதித்திருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் விளக்கம்

இதுகுறித்து லாரி டிரைவர் குணசேகரன் கூறுகையில், எனது மோட்டார் சைக்கிளை 2 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறேன். மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு சென்றது இல்லை. ஆனால் தற்போது திருச்சி போக்குவரத்து போலீசாரிடம் இருந்து ரூ.1,000 அபராதம் விதித்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தவறு எப்படி நடந்தது என தெரியவில்லை. இது சம்பந்தமாக சேலம் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளேன், என்றார்.

இது தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி கூறுகையில், வாகனத்தின் பதிவு எண் அல்லது செல்போன் எண்ணை தவறுதலாக பதிவு செய்து இருந்தால், இது போன்று வேறு ஒரு நபரின் செல்போன் எண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் சென்று இருக்கலாம். எனவே சேலத்தில் பயன்படுத்தும் வாகனத்துக்கு திருச்சியில் போலீசார் அபராதம் விதிக்க முடியாது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்