சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: திருச்சி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-01-06 18:34 GMT

போக்சோ வழக்கு

திருச்சி உறையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). கூலித்தொழிலாளியான இவர் புதுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அந்த வீட்டிற்கு வந்த 4 வயது சிறுமியை செந்தில்குமார் பாலியல் வன்கொடுமை செய்தார். இது குறித்து சிறுமியின் தரப்பில் அவரது தாய், புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு (2022) மார்ச் மாதம் 14-ந் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செந்தில்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1½ லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட செந்தில்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்