ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்

திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடந்தது.

Update: 2023-08-03 20:26 GMT

ஆடிப்பெருக்கு விழா

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிவன், பார்வதி வீற்றிருக்கும் சிவாலயங்கள் மற்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபடுவது வழக்கம்.

ஆடி மாதம் 18-ந் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடுவது சோழ மன்னர்கள் காலத்தில் இருந்தே தமிழர்களிடம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரியானது தமிழகத்தில் நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை காவிரி, கொள்ளிட கரைகளில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

குடும்பமாக குவிந்தனர்

ஆடிப்பெருக்கு விழாவின் முக்கிய நோக்கமே அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து உருவான காவிரி ஆற்றை பெண் தெய்வமாக கருதி வழிபட்டால், பெண்களின் தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம். மேலும் காவிரி தாயை வழிபட்டால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. அதோடு விவசாயத்தை செழிக்க செய்யும் காவிரித்தாய்க்கு ஆடிப்பெருக்கின்போது நன்றி தெரிவித்து வழிபடுவது வழக்கம்.

இதன்படி ஆடிப்பெருக்கு நாளான நேற்று அதிகாலை முதலே காவிரி தாயை வழிபட மக்கள் குடும்பம், குடும்பமாக குவியத்தொடங்கினர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கருடமண்டபம் படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, தில்லைநாயகம் படித்துறை, கீதாபுரம் படித்துறை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டு இருந்தது.

புதுமண தம்பதிகள்

காவிரி கரையில் கூடிய மக்கள் புனித நீராடி, புத்தாடைகள் அணிந்து, காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் வாழை இலைபோட்டு அதில் காப்பரிசி, தேங்காய், வாழைப்பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை, கருகமணி உள்ளிட்ட பொருட்களை படையலிட்டு வைத்து தீபம் ஏற்றி காவிரி தாய்க்கு பூஜை செய்து வழிபட்டனர்.

சுமங்கலி பெண்கள் தங்கள் மாங்கல்ய கயிற்றை புதுப்பித்து ஒருவருக்கொருவர் மாற்றிக்கட்டிக் கொண்டு, குடும்பத்தில் உள்ள மூத்த பெண்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றனர். புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் புனித நீராடி, புத்தாடை அணிந்து காவிரி தாய்க்கு பூஜைகள் நடத்தினர். பின்னர் திருமணத்தின்போது, தாங்கள் அணிந்து இருந்த மாலைகளை வாழை இலை, மூங்கில் கூடை ஆகியவற்றில் வைத்து காவிரி ஆற்றில் விட்டனர்.

கன்னிப்பெண்கள்

திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க காவிரித் தாயிடம் வேண்டி அங்குள்ள அரசமரம், வேப்பமரங்களில் சந்தனம், மஞ்சள் பூசி, மஞ்சள் கயிறுகளை மரத்தில் கட்டி குங்குமம் இட்டனர். ஆண்களும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு காவிரித் தாயை வேண்டி மஞ்சள் கயிறை கையில் கட்டி கொண்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராடிய மக்களின் பாதுகாப்புக்காக அம்மா மண்டபம் படித்துறையில் படிக்கட்டு அருகில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆடிப்பெருக்கையொட்டி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்ட நீர்நிலைகள் நிறைந்த பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், குழாய்கள் மூலம் பெண்கள் குளிப்பதற்கு வசதியாக மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. உடைகளை வைப்பதற்காக சிறிய, சிறிய கூண்டு அறைகளும் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

ரப்பர் படகில் தீயணைப்பு படையினர்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தீயணைப்புத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் காவிரி ஆற்றின் கரைகளில் தயார் நிலையில் இருந்தனர். காவிரி ஆறு ஓடத்துறை படித்துறை அருகே ரப்பர் மிதவை படகில் அமர்ந்து அவ்வப்போது ரோந்து சுற்றி வந்தனர். உற்சாக மிகுதியால் பொதுமக்கள் யாரும் ஆழமான பகுதிகளுக்கு சென்றுவிடக்கூடாது என்று தீயணைப்புத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது.

இதேபோல் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சங்கிலி பறிப்பு, திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில், பெண் போலீசார் மாறுவேடத்தில் ரோந்து பணியை மேற்கொண்டனர். போக்குவரத்து போலீசார் அம்மா மண்டபம் சாலையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்