திருச்சி என்ஜினீயர் சாவு
கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த திருச்சியை சேர்ந்த என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகிறாா்கள்.
கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவந்த திருச்சியை சேர்ந்த என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகிறாா்கள்.
வேகமாக பரவும் காய்ச்சல்
தமிழகத்தில் எச்3என்2 மற்றும் `இன்புளூயன்சா' பி வைரசால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. உடல் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும் இந்த வகை காய்ச்சல் சில நேரங்களில் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகிறது. பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரை பறிக்கிற அளவுக்கு கோர முகத்தையும் காட்டுகிறது.
இந்த காய்ச்சலை கண்டறிய தமிழக சுகாதாரத்துறை காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் காய்ச்சலுக்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதுடன், அரசு ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.
என்ஜினீயர் சாவு
இந்தநிலையில் பெங்களூருவில் என்ஜினீயராக பணியாற்றி வந்த திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டார். இதனால் அவர் சிகிச்சைக்காக திருச்சிக்கு வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. ஆனால் அவர் எந்த வகை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் என்று கண்டறிய ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால், அவர் நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா பரிசோதனை
இதுபற்றி அறிந்த திருச்சி மாநகராட்சி மாநகர் நல அதிகாரி டாக்டர் மணிவண்ணன் தலைமையிலான சுகாதாரகுழுவினர் அந்த என்ஜினீயரின் வீட்டிற்கு சென்று அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான், திருச்சியை சேர்ந்த என்ஜினீயர் எந்த வகை வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து கொள்வது ஒன்றே சிறந்த வழி என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.