திருச்சி மாவட்ட செய்தி சிதறல்

திருச்சி மாவட்ட செய்தி சிதறல்

Update: 2023-07-21 18:30 GMT

கொத்தனார்

*கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் திருச்சி மாவட்டம் லால்குடியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். மேலும் அவர்கள் தனிமையில் சந்தித்து பழகியதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இது குறித்த புகாரின் பேரில் லால்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை கைது செய்தனர்.

4 கடைகளுக்கு `சீல்'

* திருச்சி நெ.1 டோல்கேட் பகுதியில் உள்ள மதுரா டீ ஸ்டால், நத்தர்ஸா பள்ளிவாசல் பகுதியில் உள்ள ஜமால் ஸ்டோர், சறுக்குபாறை பகுதியில் உள்ள சரவணா ஸ்டார் மற்றும் எடமலைப்பட்டிப்புதூர் பகுதியில் உள்ள பீடா ஸ்டால் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 4 கடைகளுக்கும் அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

மொபட் திருடியவர் கைது

*திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சரவணன் (41). இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த மொபட்டை திருடியதாக காட்டூர் ஆயில் மில் கணேசபுரத்தை சேர்ந்த அருண் என்ற அருண்குமார் (19) என்பவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்.

மின்கம்பிகள் திருட்டு

*தா.பேட்டை அருகே துலையாநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்டல் கம்பெனி அருகில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றி உள்ளது. இதில் இருந்த 150 கிலோ எடை கொண்ட ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செம்பு மின் கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் தற்கொலை

*தா.பேட்டையை அடுத்த வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராமசாமி (75). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராமசாமி தோட்டத்திற்கு சென்ற போது தடுமாறி கீழே விழுந்ததில் இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமசாமி கடும் அவதி அடைந்து வந்தார். இதனால் மனம் உடைந்த அவர் பெயிண்ட் அடிப்பதற்கு பயன்படுத்தப்படும் வார்னிசை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் படுகாயம்

*தா.பேட்டை அடுத்த தேவானுர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (49). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிச்சைமுத்து (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காமாட்சி அம்மன் கோவில் அருகே எதிரே தா.பேட்டை பகுதியை சேர்ந்த சக்திவேல் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி உள்ளது. இதில் சங்கர், பிச்சைமுத்து ஆகிய இருவரும் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். இது குறித்த புகாரின் பேரில் தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாய்லர் ஆலை தொழிலாளி சாவு

*துறையூர் நடுவலூரை சேர்ந்தவர் புரவி (வயது 50). இவர் திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வேலைக்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்