முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த போலீஸ்காரர் மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் ராணுவ வீரர்
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 53). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 24-ந்தேதி சென்னையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றுவிட்டார்.
25-ந்தேதி வீட்டுக்கு திரும்பியபோது, 3½ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.
கைது
இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்த ரமேஷ் (25), திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி வேலாயுதம் குடியை சேர்ந்த வசந்தகுமார் (24), கைலாஷ் நகர் சீனிவாச நகரை சேர்ந்த ராஜதுரை (24) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட வசந்தகுமார் போலீஸ்காரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
லாட்டரி சீட்டுகள் விற்றவர்கள் கைது
*தா.பேட்டை கடை வீதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்ற மகாதேவி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(45) என்பவரை தா.பேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல் தொட்டியம் அருகே அலகரையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக கல்லுப்பட்டியை சேர்ந்த நாகராஜ் (65) என்பவரை தொட்டியம் போலீசார் கைது செய்தனர்.
பசுமாடு மீட்பு
*உப்பிலியபுரம் அருகே மாராடி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த கறவை பசுமாட்டை உப்பிலியபுரம் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
பெயிண்டர் தற்கொலை
*திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (35). பெயிண்டரான இவர் காசிலா (38) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் குடிபோதைக்கு அடிமையான விஜயகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் பறிமுதல்
*மணப்பாறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சத்யா, திருச்சி செயலாக்க பிரிவு ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் பாலக்குறிச்சி மற்றும் துவரங்குறிச்சி பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். துவரங்குறிச்சியில் நடைபெற்ற சோதனையில் அதிக பள்ளி குழந்தைகள் ஏற்றி வந்த பயணிகள் வேனை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி குறைபாடு உள்ள வாகனங்கள் குறித்து சோதனை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.