பணம் கேட்டு மிரட்டியவர் கைது
*திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சாதிக் (வயது 49). இவர் நேற்று முன்தினம் கோணக்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த போது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 கேட்டதாக பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (19) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் மாயம்
*திருச்சி புத்தூர் ஆட்டுமந்தை தெருவை சேர்ந்த சவுந்தராஜன்-யூஜின்மேரி தம்பதியின் மகள் பிரசாந்தி (19) சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபர்
*திருச்சி ஸ்ரீரங்கம் அழகிரிபுரம் பஸ்நிறுத்தத்தில் 35 வயதுடைய வாலிபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இதுகுறித்து வெளிதிருமுத்தம் கிராமநிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயங்கி விழுந்த வாலிபர் சாவு
*திருச்சி நாச்சிக்குறிச்சியை சேர்ந்தவர் நிலவரசன் (35). இவர் மதுபோதையில் கொடாப்பு பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மயங்கி விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நிலவரசனின் மனைவி பத்மா (27) கொடுத்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெருவில் பிறந்தநாள் கொண்டாடியதால் தகராறு
*திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 52). அதே பகுதியில் வசிப்பவர் காளிமுத்து (47). சம்பவத்தன்று நள்ளிரவு காளிமுத்துவின் மகன் கணேஷ் தனது பிறந்தநாளை தெருவின் நடுவில் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது, அவர்கள் அதிகமாக கூச்சலிட்டுள்ளனர். இதை முஸ்தபா கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறின் போது முஸ்தபாவை தகாத வார்த்தைகளால் காளிமுத்து திட்டியதுடன் அவரை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
*திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் வசந்த். இவர் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் பொன்மலை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ்கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.