திருச்சி பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருச்சி பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-10-22 07:20 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி முதல் பால்பண்னை வரை சாலையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் இந்திய ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. அப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் சாலை விபத்தில் சிக்கி ஏராளமானோர் பலியாகும் நிலையில் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க இந்திய, ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் காத்திருக்கின்றது?

கடந்த 2006 ஆம் ஆண்டு திருச்சி – தஞ்சை இடையே அணுகுசாலையுடன் கூடிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை அன்றைக்கு இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரசு – திமுக கூட்டணி அரசு அறிவித்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டு சாலைப் பணிகள் முடிந்து தேசிய நெடுஞ்சாலை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தபோது அணுகுசாலை அமைக்கப்படவில்லை என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியும், மிகுந்த இன்னலுக்கும் ஆளாகினர். துவாக்குடி – பால்பண்னை இடையே தொடர்ச்சியாக விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்த நிலையில், அப்பகுதி பொதுமக்கள் 'பால் பண்ணை – துவாக்குடி அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பை' தொடங்கி கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இன்றுவரை அணுகுசாலை அமைக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது.

அணுகுசாலை அமைக்காமல் வேண்டுமென்றே ஒன்றிய பாஜக அரசு தாமதிப்பதாக அன்றைய எதிர்க்கட்சியான திமுக குற்றஞ்சாட்ட, மாநில அரசு போதுமான நிலம் கையகப்படுத்தித் தரவில்லை என பாஜகவோ அன்றைய அதிமுக அரசைக் கைகாட்டியது. 2006 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை அமைக்கத் தொடங்கும்போதே போதுமான நிலத்தை கையகப்படுத்தாத முந்தைய திமுக அரசின் அலட்சியப்போக்கே அணுகுசாலை அமைக்க முடியாததற்கு முக்கிய காரணம் என்று மீண்டும் திமுக மீதே பழி சுமத்திய அன்றைய அதிமுக அரசு, சாலையோர கடை வியாபாரிகள் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அணுகுசாலை அமைப்பதற்கு எவ்வித முயற்சியும் எடுக்காமல் கிடப்பில் போட்டது.

அணுகுசாலை வழக்கில் கடந்த 15.10.2019 அன்று இறுதி தீர்ப்பு வழங்கிய மதுரை உயர்நீதிமன்றம் உடனடியாக நிலம் கையகப்படுத்தி அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அணுகுசாலை அமைக்க வேண்டுமென இந்திய ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு சில தன்னலக்காரர்களின் லாபத்திற்காக தமது ஆட்சி முடியும் வரை அதிமுக அரசு அணுகுசாலை அமைக்காமல் ஏமாற்றியது.

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் அணுகுசாலை அமைப்போம் என்று உறுதியளித்த திமுகவோ, அதிகாரத்தை அடைந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காமல் அதிமுக செய்த அதே துரோகத்தை மக்களுக்கு செய்து வருகிறது. இதனால் அணுகுசாலைக்காகப் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துச் சோர்ந்துள்ள, துவாக்குடி – அரியமங்கலம் பகுதி மக்களுக்கு இன்றுவரை தீர்வு கிடைக்கவில்லை என்பதோடு, சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியவில்லை என்பது மிகப்பெரும் கொடுமையாகும்.

ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு அரசு திருச்சி புறநகர்ப்பகுதியான பால்பண்ணை – துவாக்குடி இடையே அணுகுசாலை அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விபத்துக்களால் உயிர்கள் பலியாவதை தடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்