திருச்சி மத்திய சிறை புதிய இடத்துக்கு மாறுகிறது
திருச்சி மத்திய சிறையை இடமாற்றம் செய்து புதுக்கோட்டை சாலையில் ரிங்ரோடு அருகே அமைக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.;
திருச்சி மத்திய சிறையை இடமாற்றம் செய்து புதுக்கோட்டை சாலையில் ரிங்ரோடு அருகே அமைக்க பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறை
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் திருச்சி மத்திய சிறைச்சாலை உள்ளது. சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப்போராட்ட தியாகிகள் பலரும் திருச்சி சிறையில் கைதிகளாக தண்டனை அனுபவித்துள்ளனர். மிகவும் பழமையானதும், நீண்டநெடிய வரலாற்றையும் கொண்ட திருச்சி சிறைச்சாலையில் தற்போது வரை சுமார் 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், தடா கைதிகள், குண்டுவெடிப்பு வழக்கு கைதிகள் என பலர் உள்ளனர். இங்கு பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் கைதிகள் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுவது, ஆயத்தஆடை தயாரித்தல் உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் சிறிதளவு அந்த கைதிகளின் குடும்பத்துக்கும் செல்கிறது.
கைதிகளுக்கு தொழிற்பயிற்சி
பொங்கல் பண்டிகை நேரத்தில் திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் வளர்க்கப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல்முறையாக திருச்சி மத்திய சிறையில் தான் ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டு கைதிகளுக்கு தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறையில் திருச்சி மட்டுமின்றி, அதனை சுற்றியுள்ள கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கைதிகளும் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.
மேலும், இதே சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாமும் உள்ளது. இங்கு இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, பல்கேரியா உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருச்சி மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
புதிய இடத்துக்கு மாற்றம்
அதன்பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருச்சி-மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இயங்கி வரும் மத்திய சிறைச்சாலையை இங்கிருந்து புதுக்கோட்டை சாலையில் ரிங்ரோடு அருகே மாற்ற முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அரசுக்கு சொந்தமாக உள்ள சுமார் 240 ஏக்கரில் புதிய சிறைச்சாலை கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த இடத்துக்கு சென்று அதிகாரிகள் ஆய்வும் நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் அனுமதி வேண்டி ஒரு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி கிடைத்தவுடன் புதிய இடத்தில் சிறைச்சாலை அமைப்பதற்கான கட்டுமானபணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து திருச்சி சிறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "திருச்சி மத்திய சிறையை இடமாற்றம் செய்யும் முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டு பரிசீலனையில் இருந்து வருகிறது என்பது உண்மை தான். ஆனால் அதற்கான உத்தரவு தற்போது எதுவும் வரவில்லை"என்றனர்.