திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் 29-ந் தேதி திறப்பு

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் 29-ந் தேதி திறக்கப்படுகிறது.

Update: 2023-05-24 20:27 GMT

அரிஸ்டோ ரவுண்டானா

திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது. இந்த பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.81 கோடி திட்ட மதிப்பில் 2 கட்டங்களாக பாலத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பஸ் நிலைய பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம், மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

ராணுவ இடம்

இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றது. இதில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த பாலம் முழுமை அடையாமல் 8 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து அரிஸ்டோ மேம்பாலத்தில் மன்னார்புரம் செல்லும் வழியில் பாதியில் விடுபட்ட பாலப் பணிகளுக்கான இடத்தை கொடுக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

29-ந் தேதி திறப்பு

அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் பூமி பூஜையுடன் அந்த பணிகள் தொடங்கியது. இதில் ரூ.3 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் ெதாடங்கப்பட்ட பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த பாலத்தில் இறுதி கட்ட பணிகளாக மின் விளக்கு பொருத்தும் பணி, வழிகாட்டி பலகை பொருத்தும் பணிகள், பாலத்தின் வழியே செல்லும் பாதையில் வெள்ளை நிற கோடுகள் போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அடுத்த வாரம் முடிவடையும் என்றும் வருகிற 29-ந்தேதி பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றும், இதனை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்