பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி; நினைவுத்தூணில் போலீஸ் கமிஷனர் மலர் வளையம் வைத்து மரியாதை
பணியின்போதுஉயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாளையங்கோட்டையில் உள்ள நினைவுத்தூணில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பணியின்போதுஉயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாளையங்கோட்டையில் உள்ள நினைவுத்தூணில் போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர் வீர வணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர்.
இதையொட்டி தமிழகத்தில் பணியின்போது உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சந்திரசேகரன், காவலர் தேவராஜன் உள்பட நாடு முழுவதும் 264 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
போலீஸ் கமிஷனர்
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு தூணில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதேபோல் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நெல்லை மாநகர துணை கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், அம்பை உதவி சூப்பிரண்டு பல்வீர்சிங், மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு மாரிராஜன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகம், டவுன் உதவி கமிஷனர் விஜயகுமார், மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் டேனியல் கிருபாகரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்த வந்த அதிகாரிகள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். தொடர்ந்து 16 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டு 48 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.