ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

புல்வாமா தாக்குதலில் வீரமணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

புல்வாமா தாக்குதலில் வீரமணம் அடைந்த 40 ராணுவ வீரர்களுக்கு கிருஷ்ணகிரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

40 வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

அதன்படி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் துணை ராணுவப்படை நலச்சங்கம் மற்றும் பணியில் உள்ள கமாண்டோ நலக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் துணை ராணுவப் படை நலச்சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜிகான், மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட துணைத்தலைவர் வெங்கட்டராமன், மாவட்ட செயலாளர் ராஜாமணி, மாவட்ட பொருளாளர் பழனிகுமார், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், குடும்பத்தினர் பங்கேற்று, அங்கு அமைக்கப்பட்டு இருந்த நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மவுன அஞ்சலி

இதில் தற்போது சி.ஆர்.பி.எப்.ல் பணிபுரியும் கமாண்டோ குழுவை சேர்ந்த கூடுதல் உதவி ஆய்வாளர் வீரபத்திரன், அன்பழகன் மற்றும் குழு உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக வீர மரணம் அடைந்த அவர்களது நினைவை போற்றும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கல்லூரி மாணவிகள் மெழுகுவர்த்தி ஏற்றியும், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. மாணவர்கள் பேண்ட் வாத்தியம் முழங்கியும் வீரவணக்கம் செலுத்தினர். இதில் அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி, காவல்துறை, மருத்துவத்துறை, நகர பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்