ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க சோதனை ஓட்டம்
ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க, நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது 143 கிலோ மீட்டர் வேகத்தில் காட்பாடி வழியாக ரெயில் இயக்கப்பட்டது.
சோதனை ஓட்டம்
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக தினமும் 120-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூரு, கோவை, கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு இந்த வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக ரெயில்களின் வேகம் 110 கிலோமீட்டர் வரை உள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ஒரு சில ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை ரெயில்களின் வேகத்தை 143 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி நேற்று சென்னை சென்டிரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது 143 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. இதில் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் மற்றும் என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.
பாலங்களின் உறுதித்தன்மை ஆய்வு
இந்த சோதனை ஓட்டத்தின் போது தண்டவாளத்தின் அதிர்வு தன்மை மற்றும் சென்னை- ஜோலார்பேட்டை இடையே உள்ள பாலாறு, பொன்னையாறு பாலங்களின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் ரெயில்கள் அதிகபட்சமாக 130 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும். இன்னும் அதி வேகமாக செல்லக்கூடிய ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தால் விரைவில் சென்னை சென்டிரல் முதல் ஜோலார்பேட்டை வரை ரெயில்கள் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.
விரைவாக செல்ல முடியும்
சென்னை சென்டிரலில் இருந்து ஜோலார்பேட்டை வரை அதிவேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும் போது பெங்களூரு, கேரளா, கோவை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் இன்னும் விரைவாக சென்றடைந்து விடும். மேலும் குறித்த நேரத்தில் ரெயில்களை இயக்க முடியும். கூடுதலாக ரெயில்களை இயக்கவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.