மின்வழித்தடத்திற்காக வெட்டப்பட்ட மரங்களை அகற்ற வேண்டும்

மானாமதுரை-காரைக்குடி இடையே மின்வழித்தடத்திற்காக ரெயில் நிலையத்தில் வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ரெயில் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-23 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை-காரைக்குடி இடையே மின்வழித்தடத்திற்காக ரெயில் நிலையத்தில் வெட்டப்பட்ட மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று ரெயில் பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெட்டப்பட்ட மரங்கள்

தமிழகத்தில் உள்ள ரெயில்வே வழித்தடங்களை மின் வழித்தடமாக மாற்றும் பணியில் இந்திய ரெயில்வே துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மானாமதுரையில் இருந்து திருச்சி வரையிலான ரெயில்வே வழித்தடத்தை மின்பாதையாக மாற்றும் பணி கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதில் முதலில் திருச்சி முதல் காரைக்குடி வரை மின்வழித்தடம் மாற்றப்பட்டு அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக மானாமதுரை-காரைக்குடி இடையேயான மின் வழித்தடம் மாற்றும் பணி தாமதமாக நடந்து வந்தாலும் தற்போது அந்த பணிகள் முற்றிலும் நிறைவு பெற்றது. தற்போது இந்த மின் வழித்தடம் மாற்றும் பணிக்காக ஏற்கனவே ரெயில்வே தண்டவாள பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மரங்கள் முற்றிலும் வெட்டப்பட்டது.

பயணிகள்சிரமம்

ரெயில்வே நிலையங்களில் உள்ள பழமையான அரச மரம், ஆல மரம், வேம்பு உள்ளிட்ட மரங்களும் உயர் மின்னழுத்த கம்பி செல்ல உள்ளதால் அந்த மரங்களும் வெட்டப்பட்டது.

இதையடுத்து வெட்டப்பட்ட இந்த மரங்கள் மானாமதுரை ரெயில் நிலையத்தில் உள்ள நடை பாதையில் பல மாதமாக அகற்றப்படாமல் கிடப்பதால் பயணிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ரெயில்வே பயணிகள் தரப்பில் கூறியதாவது:-

மானாமதுரை ரெயில் நிலையம் ஜங்ஷன் அந்தஸ்து பெற்ற ரெயில் நிலையமாக உள்ளதால் இந்த ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, விருதுநகர், திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வர ரெயில் பயணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

அகற்ற வேண்டும்

மானாமதுரை ரெயில் நிலையத்தில் மின் வழித்தடமாக மாற்றும் பணிக்காக பழமையான மரங்களை ரெயில்வே நிர்வாகத்தினர் வெட்டி அகற்றினர். அவ்வாறு அகற்றப்பட்ட மரங்கள் பிளாட்பாரத்தில் அப்படியே போட்டு சென்றதால் இங்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் பிளாட்பாரத்தில் காத்திருக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

பல மாதமாக வெட்டப்பட்ட மரங்கள் அகற்றப்படாமல் அங்கேயே கிடப்பதால் பல்வேறு பூச்சிகள் அங்கு வரவும் காரணமாக உள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் வெட்டப்பட்ட இந்த மரங்களை உடனடியாக ஏலம் விட்டு இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்