பல மாதங்களாக வீணாகி வரும் தேக்கு மரங்கள்

சீர்காழி பகுதியில் பல மாதங்களாக தேக்கு மரங்கள் வீணாகி வருகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-05-31 14:37 GMT

சீர்காழி:-

சீர்காழி பகுதியில் பல மாதங்களாக தேக்கு மரங்கள் வீணாகி வருகின்றன. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

தேக்கு மரங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், நிம்மேலி, கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், அத்தியூர், விளந்திடசமுத்திரம், காரைமேடு, வடகால், எடமணல், மாதானம், நல்லூர், அளக்குடி, ஆச்சாள்புரம், அகர எலத்தூர், குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறு, வாய்க்கால் போன்ற நீர்நிலைகளின் கரையோரம் வனத்துறை சார்பில் தேக்கு மரக்கன்றுகள் வைக்கப்பட்டன.

இந்த கன்றுகள் தற்போது பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டு காற்றுடன் பெய்த மழையால் சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் நடப்பட்டிருந்த வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரங்கள் வயல்களில் சாய்ந்து விழுந்தன.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

இந்த மரங்கள் வனத்துறையால் உரிய முறையில் அப்புறப்படுத்தப்படவில்லை. இதனால் மரங்கள் கடந்த பல மாதங்களாக வயலிலேயே வீணாகி வருகின்றன. வயலில் சாய்ந்து கிடக்கும் மரங்களை விவசாயிகள் அப்புறப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மரங்களை அப்புறப்படுத்தினால் வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சீர்காழி தாலுகா முழுவதும் பல்வேறு இடங்களில் வீணாக சாய்ந்து கிடக்கும் தேக்கு மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்