சென்னையில் இருந்து காட்பாடிக்கு பயணம்: ரெயில் பெட்டியே அலுவலகமானது முதல்-அமைச்சர் டுவிட்டர் பதிவு

ரெயில் பெட்டியே அலுவலகமானது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2023-02-02 00:20 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்கள், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் பொதுமக்களை அலைக்கழிக்காமல் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின்படி முக்கிய அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் முதல்-அமைச்சரே மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிர்வாகப் பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளையும் ஆய்வு செய்வார்.

அதன்படி, 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் முதல் 2 நாள் அரசு முறை பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று புறப்பட்டார்.

ரெயில் பயணம்

இதற்காக சென்னை சென்டிரல்-சீரடி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று பிரத்யேகமாக ரெயில் பெட்டி ஒன்று கடைசி பெட்டியாக இணைக்கப்பட்டு இருந்தது.

ரெயிலில் செல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு தலைவர் பி.ரங்கநாதன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எபனேசர், ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர், பொதுச்செயலாளர் கண்ணையா உள்ளிட்டோரும் முதல்-அமைச்சரை வரவேற்றனர். ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

அதிகாரிகளும் பயணம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10.05 மணிக்கு பிரத்யேக ரெயில் பெட்டியில் ஏறினார். அவருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் சென்றனர். பின்னர், ரெயில் பெட்டியின் படிக்கட்டுப்பகுதிக்கு திரும்பி வந்த முதல்-அமைச்சர் வாசலில் நின்றபடி, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை உயர்த்தி காட்டிய படியும் தனது பயணத்தை தொடங்கினார்.

முதல்-அமைச்சருடன் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோரும் ரெயிலில் பயணம் செய்தனர்.

'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் புறப்பட்டு, இரவு சென்னை திரும்புகிறார்.

ரெயில் பெட்டியே அலுவலகமானது

இந்த பயணம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ரெயில் பெட்டிக்குள் இருந்து பயணம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில், "கோட்டையில் தீட்டப்படும் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதர் வரை சென்றடைவதை உறுதி செய்யும் 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தினை செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டேன். ரெயிலிலேயே ஆய்வுக்கான அடிப்படைகளை அமைத்து பயணமாகும் பெட்டியே அலுவலகமாக ஆனது!" என்று தெரிவித்து உள்ளார்.

அரசு முறை பயணத்துக்கு துணிப்பையுடன் எளிமையாக வந்த தலைமைச் செயலாளர்

'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' திட்டத்தின் முதல் அரசுமுறை 2 நாள் பயணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்டார். இதற்காக அவர் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சீரடி செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் காட்பாடிக்கு சென்றார்.

முதல்-அமைச்சருடன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோரும் முதல்-அமைச்சருடன் ரெயிலில் பயணம் செய்தனர். இந்த அரசு முறை பயணத்துக்காக தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆய்வு பணிக்கு தேவையான கோப்புகளை சாதாரண துணிப்பையில் வைத்தபடி, அதை தன் தோளில் சுமந்தபடி சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.

மிகவும் எளிமையாக வந்த தலைமை செயலாளரை பார்த்த ரெயில் பயணிகள் வியந்து பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்