டிராவல்ஸ் ஏஜெண்டை காரில் கடத்தி தாக்குதல்

திருச்சியில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் டிராவல்ஸ் ஏஜெண்டை காரில் விருத்தாசலத்துக்கு கடத்தி சென்று, அங்கு அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர்.

Update: 2022-12-10 19:13 GMT

திருச்சியில் பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் டிராவல்ஸ் ஏஜெண்டை காரில் விருத்தாசலத்துக்கு கடத்தி சென்று, அங்கு அறையில் அடைத்து வைத்து தாக்குதல் நடத்தினர். போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிராவல்ஸ் ஏஜென்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 29). இவர் திருச்சி பொன்னகர் 3-வது குறுக்கு வீதியில் குளோபல் அகாடமி மற்றும் கன்சல்டன்ட் என்ற பெயரில் வெளிநாட்டுக்கு செல்ல விசா பெற்றுக்கொடுக்கும் டிராவல்ஸ் ஏஜென்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இவரிடம் சப்-ஏஜெண்டாக விருத்தாசலத்தை சேர்ந்த வினோத் (39) என்பவர் செயல்பட்டு வந்தார்.

இதில், வினோத்துக்கும், சந்திரசேகருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பொன்னகரில் உள்ள சந்திரசேகரின் அலுவலகத்துக்கு 3 பேருடன் வினோத் வந்தார்.

காரில் கடத்தல்

அவர்கள், சந்திரசேகர் மற்றும் அவரிடம் பணியாற்றிய சக்திவேல் என்ற மணிகண்டன் (27) ஆகியோரை மிரட்டி ஒரு காரில் கடத்தி கொண்டு சென்றனர். பின்னர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே மணிகண்டனை மட்டும் காரில் இருந்து இறக்கி விட்டுவிட்டு, சந்திரசேகரை கடத்திக்கொண்டு அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அங்கிருந்து தப்பிய மணிகண்டன் இதுபற்றி திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான தனிப்படை போலீசார், சந்திரசேகர் மற்றும் வினோத்தின் செல்போன் எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினர். அப்போது, 2 பேரின் செல்போன் எண்களும் விருத்தாசலம் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

விருத்தாசலத்தில் மீட்பு

உடனே தனிப்படை போலீசார் விருத்தாசலத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு ஒரு அறையில் சந்திரசேகரை கட்டி வைத்து வினோத் மற்றும் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கிக்கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து சந்திரசேகரை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்திருந்த சந்திரசேகரை திருச்சி அழைத்து வந்து சிகிக்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதைத்தொடர்ந்து, வினோத் மற்றும் அவருடன் இருந்த ராஜதுரை (29) ஆகியோரை போலீசார் பிடித்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், வினோத், ராஜதுரை உள்ளிட்ட 4 பேர் மீதும் அத்துமீறி நுழைதல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், ஆள்கடத்தல், அடித்து காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

2 பேர் கைது

பின்னர் வினோத், ராஜதுரை ஆகியோரை கைது செய்த போலீசார், 2 பேரையும் திருச்சி கூடுதல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடத்திச்செல்லப்பட்ட டிராவல்ஸ் ஏஜெண்ட்டை, துரிதமாக சென்று உயிருடன் மீட்ட போலீசாரை உயர்அதிகாரிகள் பாராட்டினர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்