போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரம்: முத்தரப்பு பேச்சுவார்த்தையை புறக்கணித்த அதிகாரிகள்

சென்னையில் தொழிலாளர் நல கமிஷனர் தலைமையில் போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

Update: 2023-07-18 23:15 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிரந்தர காலி பணியிடத்தில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க கூடாது, தனியார்மயத்தை கண்டிப்பது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி சி.ஐ.டி.யு. உள்ளிட்ட சங்கங்கள் போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு வேலைநிறுத்த நோட்டீசு வழங்கியது.

இதற்கு தொழிலாளர் நல கமிஷனர், போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று கூறினார். இதனையே போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகளும் கூறியிருந்தனர். இதனை ஏற்று போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

இதுதொடர்பாக போக்குவரத்து கழக நிர்வாகம், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் நல கமிஷனர் சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் தொழிலாளர் நல இணை கமிஷனர் ரமேஷ் தலைமையில் நடந்தது. பல்வேறு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஆறுமுகம், எச்.எம்.எஸ். சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை, பணியாளர் சம்மேளன தலைவர் பத்மநாபன், ஐ.என்.டி.யு.சி தலைவர் நாராயணசாமி, சி.ஐ.டி.யு. மாநகர தலைவர் தயானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் தொழிற்சங்க கோரிக்கைகள் குறித்து பேசினர்.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

இதுகுறித்து சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறும் போது, 'முத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் நல இணை கமிஷனர், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளாமல் கூட்டத்தை புறக்கணித்து விட்டனர். ஏற்கனவே நடந்த முத்தரப்பு கூட்டங்களில் தொழிலாளர் நல கமிஷனர் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மீறி ஒப்பந்த தொழிலாளர்களை போக்குவரத்து கழக அதிகாரிகள் பணி நியமனம் செய்து உள்ளனர்.

இதுபோன்ற செயல்களால் போக்குவரத்து கழகங்களில் தொழிலாளர்களின் அமைதியை சீர்குலைப்பதுடன், சட்டவிரோதமாக செயல்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர் நல கமிஷனரிடம் 8 தொழிற்சங்கங்கள் சார்பில் மனு அளித்துள்ளோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்