சென்னையில் போக்குவரத்து, பால், குடிநீர் விநியோகம் சீரானது - தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா
வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.;
சென்னை,
சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னையில் ஓரிரு இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் சீராகியுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் படிப்படியாக மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும். பள்ளிக்கரணையில் சில பகுதியில் மட்டும் தண்ணீர் இருக்கிறது; ஆனால் போக்குவரத்து தடைபடவில்லை.
மயிலாப்பூரில் ஒரு பகுதியைத் தவிர எந்த பகுதியிலும் மின் விநியோக பிரச்சினை இல்லை. மயிலாப்பூர் தபால் அலுவலக பகுதியில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. மற்ற பகுதிகளில் மழை நீர் முழுவதும் அகற்றப்பட்டுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம், பால் உள்ளிட்ட சேவைகள் சீராக உள்ளன. வார்டு வாரியாக ஆய்வு செய்து தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளச்சேரியை பொறுத்தவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும். இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இலவசமாக சர்வீஸ் செய்ய வாகன நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.