புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் திருநங்கைகள் சாலை மறியல்

புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-27 18:47 GMT

அரக்கோணம்

அரக்கோணத்தில் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தாலுகா அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோஷ்டி மோதல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கும்பினிப்பேட்டை மற்றும் சித்தேரி பகுதிகளில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்களில் இரு பிரிவினர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த திருநங்கைகள் இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாலுகா போலீசில் அளிக்கப்பட்ட புகார் மீது எவ்வித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை என கூறி அரக்கோணம் தாலுகா அலுவலகம் அருகே திருத்தணி சாலையில் நேற்று முன்தினம் மாலை திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

இந்த மறியலின் போது விஜி என்ற திருநங்கை தீடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த போலீசார் திருநங்கை மீது தண்ணீர் ஊற்றி தடுத்து நிறுத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மற்றொரு தரப்பு திருநங்கைகளும் அங்கு குவிந்தனர். அவர்கள் நாங்களும் புகார் கொடுக்கிறோம் நடவடிக்கை எடுங்கள் என்றனர். இதனால் இவர்களுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர் சேதுபதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்