நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருநங்கை மனு
நிலத்தை மீட்டுத் தரக்கோரி திருநங்கை மனு அளித்துள்ளார்;
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சத்துவாச்சாரி ராகவேந்திரா நகரை சேர்ந்த திருநங்கை விஜயாபாஸ்கர் (வயது 38) என்பவர் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் நான் எம்.பி.ஏ. படித்துள்ளேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில் 26-வது வார்ட்டில் சுயேச்சையாக போட்டியிட்டேன். அப்போது எனது சொந்த செலவுக்கும், தேர்தல் செலவுக்கும் ரங்காபுரத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் கடன் பெற்றேன். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்து விட்டேன். இதனால் பணத்தை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் எனக்கு பணம் கொடுத்தவர் அடியாட்களுடன் எனது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு தகராறு செய்தார். இதையடுத்து எனது மற்றும் தாயாரின் வீட்டு பாகத்தையும் அவரது பெயருக்கு மாற்றிக்கொடுத்தோம். இதையடுத்து அவருக்கு வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் வட்டியுடன் சேர்த்து கூடுதலாக ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று கேட்கிறார். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி, பல லட்சம் மதிப்புடைய எங்களது நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கூறி உள்ளார்.