சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கை
சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் திருநங்கைகள் கோரிக்கை வைத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருநங்கைகள் பலர் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் திருநங்கைகள் பேசும்போது, "திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் சலுகைகள் வழங்க வேண்டும். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது இல்லை. சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவியும் கிடைப்பது இல்லை. மகளிர் திட்டம் மூலம் கடன் பெற முயன்றாலும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, திருநங்கைகள் சுயதொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும். வடவீரநாயக்கன்பட்டியில் திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட இடம் பாதுகாப்பாற்றதாக இருக்கிறது. எனவே, திருநங்கைகளுக்கு அவர்களின் சொந்த ஊரில் வசிக்கும் வகையில் இலவச வீட்டுமனை வழங்கி தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்" என்றனர்.
திருநங்கைகள் தெரிவித்த கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும் இந்த கூட்டத்தின்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் திருநங்கைகளை இணைத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்தும் பேசினர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிந்து, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.