பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் 3 பேர் இடமாற்றம் - கல்வித்துறை அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.;
சென்னை,
தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணியில் வகுப்பு-2-ஐ சார்ந்த இணை இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இணை இயக்குனராக பணிபுரியும் அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இணை இயக்குனர்-2 எஸ்.உமா, தொடக்கக்கல்வி இணை இயக்குனராகவும் (நிர்வாகம்), தொடக்க கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) கே.சசிகலா, தனியார் பள்ளிகள் இணை இயக்குனராகவும், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குனர் சி.அமுதவல்லி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
அமுதவல்லி என்பவரை பணியிடம் மாறுதல் செய்வதால் ஏற்படும் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குனர் பணியிடத்தை கே.சசிகலா முழு கூடுதல் பொறுப்பாகவும், அரசு தேர்வுகள் இணை இயக்குனராக பணிபுரியும் செல்வகுமார் என்பவர் பொது நூலக இணை இயக்குனர் பணியிடத்தை முழு கூடுதல் பொறுப்பாகவும் நிர்வகிப்பார்கள்.
மேற்கண்ட தகவல் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.