தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசலால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் ரெயில்கள் நடுவழியில்நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Update: 2023-01-09 18:31 GMT

தண்டவாளத்தில் விரிசல்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே ஊழியர்கள் நேற்று காலை சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்கள் சரி பார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை கண்டனர். உடனே இது குறித்து அரக்கோணம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகளும், ஊழியர்களும், தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை சரிசெய்யும்பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

ரெயில்கள் நிறுத்தம்

அதேபோன்று சென்னை சென்டிரல் செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், அரக்கோணத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் சென்னை சென்டிரல், சென்னையிருந்து திருத்தணி வரை செல்லும் புறநகர் ரெயில்கள், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

விரிசல் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக அனைத்து ரெயில்களும் புறப்பட்டு சென்றன. இதனால் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன அலுவலர்கள், ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் அவதி அடைந்தனர்.

இது குறித்து ரெயில்பயணிகள் கூறுகையில் ஒவ்வொரு மாதமும் ரெயில் தாமதம், தண்டவாளம் விரிசல் போன்றவைகளால் நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் விடுப்பு எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக வேண்டியுள்ளது. எனவே, ரெயில்வே துறை இது போன்ற விரிசல்கள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்