நாகர்கோவில் வந்த ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்
மதுரை அருகே இரட்டை ரெயில் பாதை பணி: நாகர்கோவில் வந்த ரெயில்கள் ஒரு மணி நேரம் தாமதம் பயணிகள் அவதி
நாகர்கோவில்,
மதுரை- விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. தற்போது திருமங்கலம் அருகே பணி நடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தன. அந்த வகையில் சென்னையில் இருந்து தினமும் காலை 5.20 மணிக்கு வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக 6.20 மணிக்கு வந்தது. இதே போல காலை 9 மணிக்கு வரவேண்டிய அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 10 மணிக்கும், காலை 7.30 மணிக்கு வரவேண்டிய பெங்களூரு எக்ஸ்பிரஸ் 8.30 மணிக்கும் வந்தது. ரெயில்கள் தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதே போல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரும் அந்தியோதயா ரெயில் நேற்று திண்டுக்கல்லுடன் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) திண்டுக்கல்லில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படுகிறது.