கிராம ஊராட்சி கணக்குகளை இணைய வழியில் கையாளுதல் குறித்த பயிற்சி
கிராம ஊராட்சி கணக்குகளை இணைய வழியில் கையாளுதல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
தோகைமலை, கடவூர் ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்களுக்கு கிராம ஊராட்சி கணக்குகளை இணைய வழியில் கையாளுதல் குறித்த பயிற்சி தோகைமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு உதவி இயக்குனர் (ஊராட்சிகள்)அன்புமணி தலைமை தாங்கினார். தோகைமலை ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், பாலசந்தர், கல்லூரி முதல்வர் பூர்ணசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில முதன்மை பயிற்றுனர் முருகன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.
இதில், கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்பட்டு வரும் கணக்குகளை இணைய வழியில் கையாளுதல், பணப்பரிவர்த்தனைகள், வரி வசூலித்தல் ஆகியவற்றை ஊராட்சி அளவில் நிர்வாகம் செய்யும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டன. தொடர்ந்து இணைய வழியில் செய்முறை விளக்கத்துடன் கணினி பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அலுவலகத்தின் மேலாளர்கள், கடவூர், தோகைமலை ஒன்றிய ஊராட்சி மன்றத்தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.