பருத்தி சாகுபடி குறித்து பயிற்சி
தியாகதுருகம் அருகே பருத்தி சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தியாகதுருகம்:
தியாகதுருகம் அருகே பழைய உச்சிமேடு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பருத்தி சாகுபடி முறைகள் குறித்து வயல்வெளி பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தலைமை தாங்கி, பருத்தி பயிரில் தீமை செய்யும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்புகள், நோய் பாதிப்புகள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்க மளித்தார். வேளாண்மை அலுவலர் வனிதா முன்னிலை வகித்தார். துணை வேளாண்மை அலுவலர் அன்பழகன் வரவேற்றார். தொடர்ந்து விவசாயிகளை பருத்தி வயலுக்கு அழைத்துச் சென்று நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும், நுண்ணூட்ட சத்து பற்றாக்குறையால் பருத்தி பயிரில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து நேரடியாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை முறைகள் மூலம் பூச்சி கட்டுப்பாடு, இனக்கவர்ச்சி பொறி, விளக்குப்பொறி ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அப்போது வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூரியா, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் ரவி, கலைவாணன் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் செல்வராஜ் நன்றி கூறினார்.