செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது குறித்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது குறித்து விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.
பயிற்சி
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட இருப்பதையொட்டி ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கான பயிற்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பயிற்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து துண்டு பிரசுரங்கள், கடையில் ஒட்ட வேண்டிய விழிப்புணர்வு பிரசுரங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் விற்பனையாளர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பயிற்சியில் கலெக்டர் பேசியதாவது:-
செறிவூட்டப்பட்ட அரிசி
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, வருகிற 1-ந்் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இரும்பு, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளடக்கிய நுண்ணூட்ட சத்து சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி, சாதாரண அரிசியுடன் 01:100 என்ற விகிதத்தில் கலந்து செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றி குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டம் குடும்ப அட்டை தாரர்களுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள இரும்பு சத்து ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம் கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும், வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி எ.ஏ.ஓய், மற்றும் பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் (மே) முதல் வழங்கப்பட உள்ளது. ஏ.எ.ஓய். அட்டைதாரர்களுக்கு 35 கிலோவும், பி.எச்.எச்.அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வழங்கப்பட உள்ளது.
பொதுவாக வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகையை தடுப்பதற்காக இந்த அரிசி வழங்கப்படுகிறது. செறிவூட்டப்பட்ட அரிசியை தண்ணீரில் போடுகின்ற பொழுது சிறிது நேரம் மிதக்கும் அதன் பிறகு சரியாகிவிடும். பொது மக்களுக்கு இந்த தகவல் சென்றடைய நீங்கள் அனைவரும் பணியாற்றிட வேண்டும்.
அரிசியின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தெளிவு படுத்திட வேண்டும். பொதுமக்கள் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சியில் மாவட்ட வருவாய் அலுவலர். வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்தையன், இணைப்பதிவாளர் திருகுண ஐய்யப்பதுரை, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் முருகேசன், வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பற்றிய விழிப்புணர்வு குறும்படம், காண்பிக்கப்பட்டது.