பெண் கைதிகளுக்கு ஆரி கலை குறித்து பயிற்சி
வேலூர் ஜெயிலில் பெண் கைதிகளுக்கு ஆரி கலை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.;
வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தொழில்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆரி கலை குறித்த பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதனை ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி 30 கைதிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், சென்னையை சேர்ந்த ஒரு பவுன்டேசன் நிறுவனமும், தாட்கோவும் இணைந்து 3 மாதம் 30 கைதிகளுக்கு இந்த ஆரி கலை குறித்து பயிற்சி வழங்குகின்றனர். ஆரி வேலைபாடுகள் அடங்கிய ஜாக்கெட் அணியும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதால் அதுகுறித்த வேலையின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த பயிற்சி மூலம் கைதிகள் தொழில் ஒன்றை கற்றுக்கொள்ள முடியும் என்றனர்.