மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிப்பது குறித்து பெற்றோருக்கு பயிற்சி

பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிப்பது குறித்து பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-03-17 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கவனிப்பது குறித்து பெற்றோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெற்றோர்களுக்கு பயிற்சி

பொள்ளாச்சி தெற்கு பகுதியில் தொடக்க மற்றும் இடைநிலை கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு வெங்கட்ரமணன் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதை பொள்ளாச்சி தெற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் காயத்ரி, ஒருங்கிணைப்பாளர் கலைசெல்வி ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

பயிற்சியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை தொடக்கத்தில் கண்டறிதல், கல்வி மையங்களில் வழங்கப்படும் சேவைகள், வலிப்பு வரும்போது கொடுக்க வேண்டிய முதலுதவி, சரியான உடல் சமநிலை மற்றும் குழந்தைகளை தூக்கி செல்லும் முறைகளை அறிந்து கொள்ளுதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

கண்ணீர் வடித்தனர்

இதில் பெற்றோர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 50 பேர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சிறப்பு ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

முன்னதாக மாற்றத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் பேசும்போது, சாதாரண குழந்தைகளை கவனிப்பது போன்று மாற்றுத்திறனாளி குழந்தைகளை பராமரிக்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் தேவையில்லாத கருத்துகளை கூறுவார்கள். அதை காதில் வாங்கி கொள்ளாமல் நம்முடைய குழந்தை என்பதை மனதில் வைத்து பராமரிக்க வேண்டும் என்றனர். அதில் சிலர் பேசியதை கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கண்ணீர் வடித்தனர்.

வலிப்பு நோய்

பயிற்சி குறித்து வட்டார வளமைய அதிகாரிகள் கூறியதாவது:-

குழந்தைகள் பிறந்தவுடன் அழுதல் உள்பட ஒவ்வொரு நிலைகளிலும் ஏதாவது மாற்றம் ஏற்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். தாமதமாக குழந்தைகளின் செயல்பாடு இருந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் சூடு அதிகமானால் தான் வலிப்பு நோய் ஏற்படும். வழக்கமான சூட்டை விட அதிகமாக சூடு இருந்தால் ஈரத்துணியை தலையில் வைக்க வேண்டும். வலிப்பு நோய் ஏற்பட்டால் கையில் பொருட்கள் கொடுப்பதை தவிர்த்து ஒரு சைடாக படுக்க வைத்து கை, கால்களை அழுத்தி பிடித்தால் போதும். மேலும் கல்வி மையத்தில் எழுதல், பேசுதல், படித்தல், பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்

Tags:    

மேலும் செய்திகள்