உடுமலை வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.
இரட்டைப் பயன்பாடு
உடுமலையை அடுத்த சின்னகுமாரபாளையம் பகுதியில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் சாகுபடி சார்ந்த பயிற்சியாக விவசாயிகளுக்கு காரீப் முன்பருவ பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்ட ஆலோசகர் அரசப்பன், உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி, விதைச்சான்றுத் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசினர்.
இந்த பயிற்சியின் போது 'குறுகிய வயதுடைய தானியம் மற்றும் தீவனம் என இரட்டைப் பயன்பாடு கொண்டதும் அதிக மகசூல் தரக்கூடியதுமான கோ (எஸ்) 32 ரக சோளத்தின் சிறப்பம்சங்கள் பற்றியும், விதை நேர்த்தி செய்தல், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள், ஊட்டம் ஏற்றிய தொழு உரம் தயாரித்து அடியுரம் இடுதல் மற்றும் பூச்சி நோய் நிர்வாகம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
மடி நோய்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் கால்நடைத்துறை கால்நடை மருத்துவர், மடி நோய் தாக்குதலின் காரணிகள் குறித்து விளக்கிக் கூறினார்.மடி நோய் மனிதர்கள் மூலமே பசுக்களுக்குப் பரவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த தண்ணீரில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்து கைகளை கழுவி விட்டு பால் கறக்க வேண்டும். மேலும் இந்த கரைசலை மாட்டு கொட்டகைகளில் தெளித்து கால்நடைகளைப் பராமரிக்க வேண்டும் என்று விளக்கினார். வேளாண்மைப்பொறியியல் துறையினர் ஈ வாடகை பற்றியும்' பண்ணைக் குட்டைகள் அமைப்பது பற்றியும் எடுத்துக் கூறினர். பொறுப்பு அலுவலர் அமல்ராஜ் விவசாயிகளிடம் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்து பொதுவான திட்ட அறிக்கை தயாரித்தலுக்கான தகவல்களை சேகரித்தார். சிறுதானிய பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் பின்செய் நேர்த்தி குறித்த புத்தகங்களும், மண் மாதிரி சேகரிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.