அனுப்பர்பாளையயம்,
திருப்பூரில் 'எண்ணும் எழுத்தும் திட்டத்தின்' கீழ்
நடைபெறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வையிட்டார்.
எண்ணும் எழுத்தும் திட்டம்
கொரோனா ஊரடங்கு காரணமாக 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். இதனால் மாணவர்களின் கற்றல் திறனில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை படித்த 8 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினார்கள்.
இதையடுத்து வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையாக எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிடும் வகையில் தமிழக அரசு 6 முதல் 8 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு முன்னோடி திட்டமான எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமார்நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் 100 அரசு தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
5 நாட்கள் பயிற்சி
இந்த பயிற்சி கடந்த 6-ந்தேதி தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் பயிற்சியை திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரி கணேசன், மாவட்ட ஆய்வாளர் ரவி ஆகியோர் பார்வையிட்டனர். வட்டாரக்கல்வி அதிகாரி சின்னக்கண்ணு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் கார்த்திகேயன் ஆகியோர் பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். முதல் நாள் தமிழ் பாடத்திற்கான பயிற்சியை பயிற்சி ஆசிரியைகள் சத்யா, அம்பிகா, ஈஸ்வரி ஆகியோர் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி ஆசிரியர்களுக்கு வழங்கினார்கள்.
2-ம் நாள் பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி பார்வையிட்டு, பயிற்சி தொடர்பான கருத்துக்களை கூறினார். திருமூர்த்திமலை கல்வியல் கல்லூரி முதல்வர் சங்கர், ஆசிரியர் பணியிடை பயிற்சி விரிவுரையாளர் பிரபாகரன் ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டனர். 2-ம் நாள் ஆங்கில பாடத்திற்கான பயிற்சியை ஆசிரியைகள் ரெனிடா, ரேவதி, வனிதா ஆகியோர் ஆங்கில பாடத்திற்கான 5 கார்னர் டி.எல்.எம். கொண்டு பயிற்சிகள் வழங்கினார்கள்.
நாளை வரை நடக்கிறது
நேற்று 3-ம் நாள் பயிற்சியை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் அமுதா பார்வையிட்டார். ஆசிரியர்கள் கண்ணன், கோபாலகிருஷ்ணன், லோகேஸ்வரி ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள். 1 முதல் 9-ம் வகுப்பு வரை எண்களுக்கான அறிமுகம் விளையாட்டின் மூலமாகவும், பொம்மலாட்டம் மூலமாகவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களை திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி சின்னக்கண்ணு பாராட்டினார். நாளை (வெள்ளிக்கிழமை) வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது.