ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு புறப்பட்ட ரெயில்

காசியில் நடைபெறும் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேசுவரத்தில் இருந்து நேற்று ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலை பா.ஜனதாவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

Update: 2022-11-16 18:45 GMT

ராமேசுவரம், 

காசியில் நடைபெறும் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேசுவரத்தில் இருந்து நேற்று ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயிலை பா.ஜனதாவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி

காசிக்கும்-தமிழகத்திற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியானது நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம்(டிசம்பர்) 19-ந்தேதி வரை காசியில் நடைபெறுகின்றது. இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. மேலும் தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், சிலம்பாட்டம், காவடி, கரகம், பட்டிமன்றம், நாட்டுப்புற நடனங்கள் பொய்க்கால் குதிரை போன்றவைகளும் அரங்கேற்றமாக நடக்கின்றன.

காசியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் செல்ல வசதிக்காக நவம்பர் 16,23,30, மற்றும் டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காசி பனாரஸ் விரைவு ரெயில் மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு பெட்டி வசதி இணைக்கப்படுவதாகவும் ரெயில்வே துறையால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜனதாவினர் வழியனுப்பி வைத்தனர்

காசியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து ஏராளமானோர் முதல் நாளாக ராமேசுவரத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ரெயிலில் சென்றனர்.

முன்னதாக ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரெயிலை பா.ஜனதாவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், கட்சியின் மாவட்ட தலைவர் கதிரவன்,மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சண்முகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன், ஜி.பி.எஸ் நாகேந்திரன், தரணி முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காசியில் நடைபெறும் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்