தாய் பாலூட்டும் போது பரிதாபம்:5 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி சாவு
தாய் பாலூட்டும் போது 5 மாத ஆண் குழந்தை மூச்சு திணறி இறந்தது.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே வி.புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு முதலில் பெண் குழந்தையும், 2-வது 5 மாத அகிலேஷ் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
பழனியாண்டி மதுரையில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல் பழனியாண்டி நேற்று வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் குழந்தைகளை ரஞ்சிதா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அகிலேஷ் அழுததால், பாலூட்டி உள்ளார்.குழந்தைக்கு பாலூட்டிய போது புரை ஏறி மூச்சு திணறி குழந்தை மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
பதறிப்போன தாய் ரஞ்சிதா குழந்தையை தூக்கிக் கொண்டு பாலமேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இருப்பினும் மனம் கேட்காமல் குழந்தையை தூக்கி கொண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள டாக்டர்கள் குழந்தை இறந்ததை உறுதி செய்தனர். இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீசார் குழந்தை இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.