குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற மகன் உருக்குலைந்து திரும்பிய சோகம் - சென்னை விமான நிலையத்தில் ஓடி வந்து கதறிய தாய்
குடும்ப வறுமையால் வெளிநாடு சென்ற வாலிபர் விபத்தில் சிக்கினார். 4 மாதங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையம் திரும்பிய மகனை கட்டி அணைத்து தாய் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.;
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா-அழகி தம்பதியர். இவர்களுக்கு வீரபாண்டி (வயது 25), அழகு பெருமாள் (22) என 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் சுப்பையா கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது. அதனால் அவர் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடும்ப வறுமையின் காரணமாக 10-ம் வகுப்பு மட்டுமே படித்து முடித்த வீரபாண்டி கடந்த ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஸ்டோர் கீப்பராக ரூ.20 ஆயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு சென்று உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி பணி முடித்து அவர் தங்கியிருக்கும் அறைக்கு செல்லும்போது கனரக வாகனம் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் பக்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
வீரபாண்டிக்கு விபத்து ஏற்பட்டது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலைக் கேட்டுப் பதறி போன பெற்றோர் தம் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என எண்ணினர். இந்த நிலையில் அவரை சென்னைக்கு அழைத்து வர வேண்டுமென்றால் பல லட்சக்கணக்கில் பணம் செலவாகும். கையில் பணம் இல்லாத காரணத்தினால் செய்வதறியாமல் தவித்து வந்தனர்.
உடனே வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தன் மகனை எப்படியாவது சென்னைக்கு அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 4 மாத போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் வீரபாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர், அப்போது அவரது தாயார் அழகி பதறி அடித்து ஓடி வந்து தன் மகனை கட்டி அணைத்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.
அதன் பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை விமான நிலையத்திலிருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வீரபாண்டியை அழைத்துச் சென்றனர்.