பிறந்தநாளன்று 8-ம் வகுப்பு மாணவி பலியான சோகம்
பனப்பாக்கம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் பிறந்தநாளன்றே 8-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பிறந்தநாள்
காஞ்சீபுரம் மாவட்டம், பொன்னியம்மன் பட்டறை கிராமத்தில் ஒத்தவாடை தெருவில் வசித்து வருபவர் குமார் (வயது 30). கேபிள் டி.வி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி (28). இவர்களது மகள் அனுசுயா (13). மகன் ஆகாஷ் (9).
இந்த நிலையில் குமார் தனது மகள் அனுசுயா பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டிவலம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். 5 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பனப்பாக்கம் அருகே சென்ற போது சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது இவர்களது மோட்டார்சைக்கிள் மோதியது.
சாவு
இதில் அனுசுயா அந்த இடத்திலேயே இறந்து விட்டார். குமார், மனைவி முத்துலட்சுமி, மகன் ஆகாஷ், மாமியார் தெய்வமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனுசுயா 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்தநாளில் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.