பிறந்து இரண்டே நாளில் குழந்தை இறந்ததால் சோகம்..!
காவேரிப்பாக்கம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்து இரண்டே நாளில் குழந்தை இறந்தது. சரியான சிகிச்சையளிக்காததால் குழந்தை இறந்ததாகக்கூறி உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.;
குழந்தை சாவு
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு குடிமல்லூர் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மனைவி சந்திரிகா பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு கடந்த 28-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென குழந்தை இறந்து விட்டது. இதனை கேள்விப்பட்ட அவரது உறவினர்கள் சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
முற்றுகை
அவர்கள் சரியான முறையில் சிகிச்சையளிக்காததால் குழந்தை இறந்ததாகக்கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்பு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.