ஈரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர் அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியல்

இந்து முன்னணியினர் சாலை மறியல்

Update: 2022-09-02 17:00 GMT

ஈரோடு சம்பத்நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனரை போலீசார் அகற்றியதை கண்டித்து இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

இந்து முன்னணி சார்பில் ஈரோடு சம்பத்நகர் பகுதியில் 11 அடி உயர விநாயகர் சிலை கடந்த 31-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் இன்று (சனிக்கிழமை) ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் சம்பத்நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டு இருந்த பேனர்களை ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி நிர்வாகிகள் ஜெகதீசன், சங்கர், சக்திமுருகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் சம்பத்நகர் நால்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி

மேலும் இந்து முன்னணியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் திடீரென்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவரது கையில் இருந்து கேனை பிடுங்கி அவரை காப்பாற்றினர்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற இந்து முன்னணியினர் அங்கு தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து வருவாய்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்