செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் மேல்மலையனூர் அருகே போக்குவரத்து பாதிப்பு
மேல்மலையனூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.;
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே தாயனூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான குடியிருப்பு இடத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மேலும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மேல்மலையனூர் அவலூர்பேட்டை சாலையில் தாயனூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.