நீலகிரி எல்லையில் வாகன போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடகாவில் முழு அடைப்பு எதிரொலியாக, நீலகிரி எல்லையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

Update: 2023-09-29 20:45 GMT

கூடலூர்

கர்நாடகாவில் முழு அடைப்பு எதிரொலியாக, நீலகிரி எல்லையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

காவிரி பிரச்சினை

தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைவான மழையே பெய்திருப்பதால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடகா மறுப்பு தெரிவித்து வந்தது.

ஆனால், காவிரி ஒழுங்காற்று குழு, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

அதிகாரிகள் ஆய்வு

இதன் எதிரொலியாக, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு வாகன போக்குவரத்து நடைபெறவில்லை. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக மைசூருவுக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக நீலகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை தொரப்பள்ளியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அங்கு கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

வெறிச்சோடிய சாலை

பின்னர் அவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களை கர்நாடகாவுக்கு செல்ல அனுமதிக்க கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் மார்தோமா நகர் உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரம் சரக்கு லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் அரசு பஸ்களும் இயக்கப்படாததால், கூடலூர் முதல் கக்கநல்லா வரை தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்