நெசவாளர்களுக்கு தொழில் வரி?: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி கண்டனம்

நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Update: 2024-11-24 05:28 GMT

சென்னை,

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையினால் எவ்வித அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந.க.எண்.26821/ஆர்-1/2024 நாள் 06.11.2024-ன் படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய மாநகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சி வாரியாக ஆய்வு செய்து கேட்பு உயர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவையான நூல்கள் மானியத்துடன் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் 2023-2024ம் ஆண்டில் ரூ.54.42 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாதந்தோறும் நூல்விலை நிர்ணயக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு நூல்விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. எனவே, நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்றதாகும்.

நெசவாளர்களுக்கான வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்பட்டு, வாழ்க்கைத்தரம் மேம்பட, தமிழ்நாடு அரசு சீரிய முறையில் பணியாற்றி வரும் நிலையில், விலையில்லா வேட்டி சேலை மற்றும் விலையில்லா சீருடை திட்டங்களை தமிழ்நாடு நெசவாளர்களுக்கு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்கின்ற குற்றச்சாட்டும், வெளிமாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகளை குறைந்த விலைக்கு வெளிச்சந்தையில் வாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும், மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றதும் உண்மைக்கு புறம்பானதும் ஆகும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்றது முதல், வேறு எந்த அரசை விடவும், நெசவாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி, பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி வரும் நிலையில், இவற்றை ஏதும் அறியாத சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பல்வேறு தேதியிட்ட கைத்தறி துறை தொடர்பான அறிக்கைகளுக்கு நான் தக்க பதிலடி கொடுத்துள்ளேன்.

அதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், வாய்க்கு வந்தவாறு செவிவழிச் செய்திகளைக் கேட்டு, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை சுய இலாபம் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக, தரம் தாழ்ந்த அரசியலில், கண்ணியமற்ற முறையில், மலிவாக ஈடுபடுவதை நான் வன்மையாக கண்டிப்பதுடன், அவர் இம்மாதிரியான நடவடிக்கைகளை இனிமேலாவது கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்