தஞ்சை வடவாறு புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
தஞ்சை வடவாறு புதிய பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
தஞ்சாவூர்:
தஞ்சை வடவாறு புதிய பாலத்தில் இருசக்கர வாகன போக்குவரத்து நேற்று தொடங்கியது.
புதிய பாலம்
தஞ்சை மாநகரில் மிகவும் பழமை வாய்ந்த பாலமான கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன் பாலம் மற்றும் கரந்தையில் உள்ள வடவாறு பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலம் இடித்து விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. 2 இடங்களிலும் இரட்டை பாலம் தலா ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டது. இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்வதற்காக கல்லணைக்கால்வாய் மற்றும் வடவாற்றின் குறுக்கே தற்காலிக பாதையும் அமைக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
இந்தநிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கல்லணையில் இருந்து கடந்த மாதம் 27-ந்தேதிதண்ணீர் திறக்கப்பட்டது. பாலப்பணிகள் நடைபெற்றதால் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் பாலப்பணிகள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் நிறைவடைந்துள்ளது. பக்கவாட்டு பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.இதையடுத்து கல்லணைக்கால்வாயில் கடந்த 5-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் கல்லணைக்கால்வாயில் போடப்பட்ட தற்காலிக பாதை அகற்றப்பட்டதையடுத்து 5-ந் தேதி முதல் இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது. ஆனால் வடவாற்றில் பாலம் பணிகள் முடிவடையாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் வடவாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி நேற்று முதல் புதிய பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
போக்குவரத்து தொடங்கியது
இதையடுத்து இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் இரட்டை பாலத்தில் ஒரு பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் தவிர இதர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை வைத்து அடைக்கப்பட்டன. இதையடுத்து இரு சக்கர வாகனங்கள் சென்று வந்தன. புதிய பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி வடவாற்றில் ஆற்றின் குறுக்கே போடப்பட்ட தற்காலிக பாதையும் அகற்றப்பட்டது.