ரெயில்வே கீழ்பாலம் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
தஞ்சையில் உள்ள ரெயில்வே கீழ்பாலம் பகுதி சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தஞ்சாவூர்;
தஞ்சையில் உள்ள ரெயில்வே கீழ்பாலம் பகுதி சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல்
தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் பகுதி சந்திப்பு சாலை தஞ்சை மாநகர பகுதிகளில் முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக இந்த சாலை தஞ்சை ரெயில் நிலையம், பெரிய கோவில் மற்றும் தஞ்சையில் உள்ள முக்கிய இடங்களுக்கு சென்று வர இந்த சாலையே பிரதானமாக உள்ளது. இந்த சாலையில் தான் பள்ளி கல்லூரி வாகனங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், தஞ்சை மாநகர பஸ்கள், தனியார் வாகனங்கள் , அன்றாட பணிகளுக்காக செல்வோர் என ஏராளமானோர் சென்று வருகிறார்கள்.
தாமதம்
இந்த சாலையில் பயணிக்கும் போது கடும் போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். குறிப்பாக காலை, மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்வோர் மற்றும் அலுவலகத்துக்கு செல்வோருக்கு கால தாமதம் ஏற்பட்டு பல்வேறு இன்னல்களை அவர்கள் சந்திக்கிறார்கள். இந்த பகுதிகளில் அடிக்கடி சின்ன சின்ன விபத்துகளும் ஏற்படுகின்றன.
தீர்வு காண கோரிக்கை
இந்த சாலை வழியாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள், பழைய பஸ் நிலையத்திலிருந்து வரும் பஸ்கள், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள், தஞ்சை சீனிவாசன் பிள்ளை ரோடு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் என நாலாபுறமும் வாகனங்கள் வருவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.