மன்னார்குடியில், போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி
தடை செய்யப்பட்ட நேரங்களில் வரும் சரக்கு லாரிகளால் மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.
மன்னார்குடி,;
தடை செய்யப்பட்ட நேரங்களில் வரும் சரக்கு லாரிகளால் மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகிறார்கள்.
வாகன போக்குவரத்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரின் பிரதான கடைத்தெருவான பெரிய கடைத்தெரு எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதி ஆகும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் கூட்டம் இந்த பகுதியில் அதிகமாக இருக்கும். மன்னார்குடி நகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்தும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இந்த கடைத்தெருவுக்கு வந்து செல்கிறார்கள்.
தடை விதிப்பு
இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சரக்குகளை கொண்டுவந்து கடைகளுக்கு இறக்கும் கனரக சரக்கு லாரிகள், மற்றும் சரக்கு வாகனங்களுக்கு காலை 8 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மாலை 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை கடை தெருவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தடை செய்யப்பட்ட நேரங்களிலும் சரக்கு வாகனங்கள் கடைத்தெருவுக்குள் வருவதால் கடைத்தெருவில் மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. இதனால் வாகனங்கள் கடைத்தெருவில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் மக்களும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
நடவடிக்கை
எனவே காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை முற்றிலுமாக கனரக வாகனங்கள் நுழைவதை தடை செய்ய வேண்டும். அப்போது தான் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று வியாபாரிகளும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இரவு தொடங்கி அதிகாலை வரை சரக்கை இறக்கும் வாகனங்கள் சரக்குகளை இறக்கிவிட்டு சென்று விட வேண்டும் என கண்டிப்பான உத்தரவிட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த உத்தரவை மீறும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தீபாவளி
இது குறித்து மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் ஆர்.வி. ஆனந்த் கூறியதாவது:- நீண்ட காலமாகவே பெரிய கடைத்தெருவில் வாகன நெரிசல் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காண சரக்கு வாகனங்கள் உள்ளே நுழையும் நேரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இரவு நேரம் மற்றும் அதிகாலை தவிர மற்ற நேரங்களில் சரக்கு வாகனங்களை அனுமதிக்க கூடாது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பொதுமக்கள் கூட்டம் இனி அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.