நெல்லை- தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றம்
பழைய பேட்டையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், நெல்லை- தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.
பழைய பேட்டையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், நெல்லை- தென்காசி சாலையில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.
இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
புதிய பாலம் அமைக்கும் பணி
நெல்லை டவுன், பழைய பேட்டை வழித்தடத்தில் தென்காசி செல்லும் பிரதான சாலையில் கண்டியப்பேரி இசக்கியம்மன் கோவில் அருகில் பழுதடைந்த நிலையில் இருந்த வாய்க்கால் பாலம் முழுமையாக அகற்றப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.
அதன்படி நெல்லை முதல் தென்காசி வரை செல்லும் பஸ்கள், புதிய பஸ்நிலையம், சந்திப்பு, டவுன், தெற்கு மவுண்ட் ரோடு, டி.வி.எஸ். கார்னர், கோடீஸ்வரன் நகர், செக்கடி, ம.தி.தா.இந்து கல்லூரி, திருப்பணிகரிசல்குளம் விலக்கு, பவர் கிரிட் இ.பி. அலுவலகம், பழைய பேட்டை வழியாக தென்காசி செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள்
தென்காசியில் இருந்து நெல்லை வரும் பஸ்கள் பழைய பேட்டை, பவர் கிரிட் இ.பி. அலுவலகம், ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம், செக்கடி, கோடீஸ்வரன் நகர், டி.வி.எஸ். கார்னர், வழுக்கோடை, தொண்டர் சன்னதி வழியாக புதிய பஸ்நிலையம் செல்ல வேண்டும்.
தச்சநல்லூர் வழியாக தென்காசி செல்லும் கனரக வாகனங்கள் தச்சநல்லூர், ராமையன்பட்டி, ரஸ்தா, மானூர், சீதபற்பநல்லூர் வழியாக தென்காசி செல்வதற்கு இருவழிப்பாதையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இன்று முதல் அமல்
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் நிரந்தரப்படுத்தப்படும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 0462-2562651 என்ற காவல் கட்டுப்பாட்டு தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.