வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
வேலூரில் தடுப்புகளை அகற்றி விட்டு வாகனங்கள் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேலூரில் தடுப்புகளை அகற்றி விட்டு வாகனங்கள் சென்றதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
வேலூர் மாநகரின் முக்கிய பகுதியாக கிரீன் சர்க்கிள் திகழ்கிறது. இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும். தற்போது புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்ததால் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட வாய்ப்பிருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி சென்னையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் காட்பாடிக்கு செல்ல வேண்டும் என்றால் கலெக்டர் அலுவலக மேம்பாலத்துக்கும், கிரீன் சர்க்கிளுக்கும் இடையே உள்ள சர்வீஸ் சாலையில் செல்லாமல் கிரீன் சர்க்கிளை தாண்டி உள்ள சர்வீஸ் சாலைக்கு சென்று பின்னர் அங்குள்ள மேம்பாலம் வழியாக சுற்றிக்கொண்டு காட்பாடி செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே கலெக்டர் அலுவலக மேம்பாலத்துக்கும், கிரீன் சர்க்கிளுக்கும் இடையே உள்ள சர்வீஸ் சாலைக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது.
தடுப்புகளை நகர்த்தி...
இந்தநிலையில் சென்னையில் இருந்து வந்த வாகனங்கள் அந்த தடுப்புகளை நகர்த்தி வைத்து சர்வீஸ் சாலையில் இறங்கி வேலூர் நோக்கி சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. ஒன்றன் பின் ஒன்றாக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் சென்றது. அங்கு போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.