4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பர்லியாரில் கார் விபத்துக்குள்ளானதால், வாகனங்கள் செல்ல முடியாமல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, அங்கு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-04-25 18:45 GMT

ஊட்டி, 

பர்லியாரில் கார் விபத்துக்குள்ளானதால், வாகனங்கள் செல்ல முடியாமல் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, அங்கு சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மலைப்பாதை

கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை, நீலகிரி மாவட்ட எல்லையான பர்லியார் பகுதியில் கார் விபத்துக்குள்ளானது. அப்பகுதியில் குறுகிய சாலையாக இருப்பதாலும், சீசன் தொடங்கி இருப்பதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு மேட்டுப்பாளையம் போலீசார் வர தாமதமானதால் 500 மீட்டர் தூரத்தில் பார்லியாரில் இருந்த நீலகிரி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

விபத்து அபாயம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் செங்குத்தான மேடு, வளைவுகள் அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையில் பர்லியார் சோதனைச் சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 100 மீட்டர் தூரத்திற்கு சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் 2 கனரக வாகனங்கள் வந்தால், ஒதுங்க இடமில்லாமல் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அதேபோல் 2 கனரக வாகனங்கள் வந்தால், சில நேரங்களில் எதிர்ப்புறத்தில் வரும் வாகனங்கள் சற்று தொலைவில் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மலைப்பாதை என்பதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவதில்லை. எனவே, அப்பகுதியில் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்