லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு; பஸ் பயணிகள் திடீர் போராட்டம்
மூலைக்கரைப்பட்டி அருகே குறுகிய சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்து கீழே இறங்கி பயணிகள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இட்டமொழி:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே காரசேரி, பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்கள் லோடு ஏற்றிய லாரிகள் நெல்லை மாவட்டம் மூைலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி வழியாக கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இதனால் மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி பகுதிகளில் சாலைகள் சேதமடைவதுடன் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அதிகளவில் விபத்துகளும் நிகழுவதாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் நெல்லையில் இருந்து முனைஞ்சிபட்டி, சிந்தாமணி வழியாக சாத்தான்குளத்துக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. முனைஞ்சிபட்டி- சிந்தாமணி இடையே குறுகலான சாலையில் சென்றபோது, எதிரே கல்குவாரிகளில் இருந்து பாறாங்கற்கள் லோடு ஏற்றிய 8 லாரிகள் வந்தன. அவற்றை நீண்ட நேரமாக பஸ் கடந்து செல்ல முடியாததால், அவதியடைந்த பயணிகள் திடீரென்று பஸ்சில் இருந்து கீழே இறங்கி, லாரி டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே சிந்தாமணி பகுதி மக்களும் பஸ் பயணிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே மூலைக்கரைப்பட்டி போலீசார் விரைந்து சென்று, பயணிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பஸ்சுக்கு மாற்றுப்பாதையில் வழி ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர் பாறாங்கற்கள் லோடு ஏற்றிய 8 லாரிகளையும் நாங்குநேரிக்கு ஓட்டிச் சென்று எடை பார்த்ததில், அவற்றில் அதிக பாரம் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து 8 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். குறுகலான சாலையில் சென்ற லாரிகளால், அந்த வழியாக சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.