அரசு ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து நெருக்கடி - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-03-09 21:57 GMT


மதுரை அரசு ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுபோல், ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்திலும் உயிர்காக்கும் அதிநவீன சிகிச்சைத்துறைகள் செயல்படுகிறது. அதாவது, அந்த கட்டிடத்தில், மூளை நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்த நாளங்கள் துறை, குடல் மற்றும் இரைப்பை மருந்தியல் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை என 7 பிரிவுகள் செயல்படுகிறது.

இதுமட்டுமின்றி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, எலும்பு வங்கி என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு நாளுக்கு நாள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், போக்குவரத்து நெருக்கடி என்பது தீர்க்கமுடியாத பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த பகுதியில் வாகனங்கள் போட்டி போட்டுக் கொண்டும், அதிவேகமாகவும், நினைத்த இடத்தில் தாறுமாறாகவும் நிறுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மதுரையில் அரசு ஆஸ்பத்திரி பகுதி மட்டுமின்றி மாநகரின் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியான அரசு ஆஸ்பத்திரி பிரதான சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 மணி நேரமும் கண்காணிப்பு

இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த சிக்கந்தர்:

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மதுரையின் முக்கிய அடையாளமாக இருக்கும் அரசு ஆஸ்பத்திரி பகுதியில் வாகனங்களால் பெரும் பாதிப்பாக இருக்கிறது. இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு நோயாளிகள் வருவதற்கு தயக்கம் காட்டும் நிலையும் உள்ளது. போலீசார் அந்த பகுதியில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும்.

அடிக்கடி ஆய்வு

ஜெய்ஹிந்த்புரம் பிரசன்னா வெங்கடேஷ்:

மதுரையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் போன்ற இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரிவர கடைபிடிக்க மறுக்கின்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் இதுபோன்ற இடங்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.

விதிமுறைகள்

எல்லீஸ்நகரை சேர்ந்த வினோத்:

மதுரை நகரில் காலை மற்றும் மாலை நேரங்களில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெருக்கடியாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தான். இந்த விஷயத்தில் பொதுமக்களின் தவறும் இருக்கிறது. பொதுமக்கள் ஆங்காங்கே ஆட்டோக்களை கை காட்டி நிறுத்துவதால் தான் விபத்தும் அதிகரிக்கிறது. பொதுமக்களும் பஸ் நிறுத்தங்களில் மட்டுமே ஆட்டோக்களை பயன்படுத்த வேண்டும். இதனை கட்டுப்படுத்த போலீசார் தினந்தோறும் கண்காணிப்பு செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அவற்றிற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு டாக்டர்கள் கூறுவது என்ன?

மதுரை அரசு ஆஸ்பத்திரி இட நெருக்கடிக்குள் தவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை கூடமும் கட்டப்பட்டு வருவதால், ஆஸ்பத்திரியின் ஒரு நுழைவுவாயில் மூடப்பட்டது. மற்றொரு பிரதான நுழைவு வாசலில் வாகனங்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரியில் உள்ளே இருந்து வெளியேவும், வெளியே இருந்து உள்ளேவும் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதுபோல் பனகல் சாலையில் நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் ஒரே நேரத்தில் ஒரு பஸ் மட்டுமே செல்ல முடிகிறது. இதனாலும் அந்த பகுதியில் அதிகமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். அது போல் வாகனங்களையும் வரைமுறைப்படுத்த வேண்டும் என்கின்றனர், அரசு டாக்டர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்