சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

வால்பாறையில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-04-23 18:45 GMT

வால்பாறை

வால்பாறையில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதமான காலநிலை

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. இதனால் சமவெளி பகுதியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டு உள்ளது. இது தவிர வார விடுமுறை நாள் என்பதால், நேற்று வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இங்கு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கடந்த மாதம் முதலே கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதி முழுவதும் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுலா வாகனங்களின் வருகையால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

நீராறு அணை

இது மட்டுமின்றி கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை, வெள்ளமலை டனல், சின்னக்கல்லாறு நீர் வீழ்ச்சி, நீராறு அணை மற்றும் சோலையாறு அணை ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதோடு இதமான காலநிலையில் இயற்கை அழகை ரசித்து மகிழ்கிறார்கள்.

பலத்த மழை

இதற்கிடையில் மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மேலும் சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டது. இது தவிர சந்தை நாள் என்பதால், வால்பாறை நகருக்கு பொருட்கள் வாங்க வந்த சுற்றுவட்டார பகுதி மக்களும் அவதிப்பட்டனர். மேலும் சாலையோர வியாபாரிகளின் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்